பூலோக சொர்க்கத்தின் ஒரு பகுதி போல் காட்சி அளிக்கும் மோயர் பாய்ண்டிற்கு வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பிரதேச கொடைக்கானல் சாலைகள் உங்களை வழிநடத்திச் செல்லும். இது வெல்லகாவி வனப் பகுதியை பார்த்தவாறு அமைந்துள்ளது. கொடைக்கானலில் உள்ள மற்ற பார்வையிடும் இடங்களைப் போல் அல்லாமல் மலைப்பகுதியின் இயற்கை எழிலில் உங்களை மெய்மறக்கச் செய்யும் காட்சிகளை இந்த மோயர் பாயிண்ட் வழங்குகிறது. 40 மைல் சாலை என்று அழைக்கப்படும் கோஷன்ஸ் சாலைக்கு அடிக்கல் நாட்டும் பொழுது, 1929 ஆம் ஆண்டு சர் தாமஸ் மோயர் என்பவரால் இந்த இடம் ஆரம்ப புள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதனால் காரணப் பெயராக மோர் பாயிண்ட் என்ற புனை பெயரையும் பெற்றது. இந்த சாலையின் துவக்கத்தை நினைவூட்டும் விதமாக நிறுவப்பட்ட ஒரு தூணையும் இங்கு நீங்கள் காணலாம். இந்த பகுதியில் வளைந்து நெளிந்து செல்லும் ஒரு பாதை, அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாகவும், இந்தப்பகுதியுளுள்ள சிகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகளின் ஒட்டுமொத்த கம்பீரத்தில் திளைக்கும் ஓர் பார்வை கோபுரத்தையும் கொண்டுள்ளது.
இவ்விடத்தின் சிறப்பம்சமே இது கொடைக்கானலின் பிரத்யேக அடர்ந்த மூடுபனிப் படர்வை அடிக்கடிக் காண வழிவகுக்கும் ஓரிடத்தில் அமைந்திருப்பது தான். மூடுபனியாக இருப்பினும் உங்கள் மனநிலையை சூரியனின் கதிர்வீச்சைப் போல் தெளிவாக வைப்பதற்கு புத்துணர்வான பல்வேறு காட்சிகளையும் நமக்கு வள்ளல் போல வழங்கும் ஓரிடம் இந்த மோயர் பார்வைப்பகுதி. அன்றாட நகர வாழ்க்கையின் பரபரப்பையும் சலசலப்பையும் விட்டு அகன்று இயற்கையின் பாதத்தை தொழுவதற்கு ஒரு சிறந்த சாளரம் மோயர் பாயிண்ட். இங்கு தவழும் மலைகள் மற்றும் மிதக்கும் மேகங்கள் போல நம் மனது நிம்மதி பெறுவதற்கான அத்துணை அழகியலையும் உள்ளடக்கியது. வெண்மையான மூடுபனி மற்றும் மரங்களின் பசுமை சரிவர போர்த்திய மாமலைகளின் சரிவையும் முழு அழகுணர்ச்சியையும் கண்டுகளிக்க இதைவிட சிறந்த இடம் வேறெங்கும் கிட்டாது. கொடைக்கானலுக்கு உங்கள் பயணத்தின் பொழுது காணத்தவற விடக்கூடாத இடங்களின் பட்டியலில் முதன்மையானது மோயர் பாயிண்ட்.
கொடைக்கானல் பேருந்து நிலையம், 10 கி.மீ.
மதுரை சர்வதேச விமான நிலையம் 143 கிமீ தொலைவில் உள்ளது.
பழனி ரயில் நிலையம், 76 கி.மீ.
கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் குளிர் மற்றும் இதமான காலநிலை நிலவுகிறது. இருப்பினும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலநிலை மிகவும் சிறப்பாக இருக்கும் போது பார்வையிட சிறந்த நேரம்.